01.இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

கட்டுரையினுள் அடங்கியவைகள்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா ?
-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.
-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.
-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.
-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?
-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும்
-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.
-08-இறைவனைத் தேடும் அறிவியலுக்கான திறப்பு எங்கே?
-09-இத்தளம் ஆழமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கும் விடயங்கள்.
-10-கட்டுரைச் சுருக்கம்.


உள்ளடக்கத் துளிகள்.


"தந்தை_பெரியார்" கூறுகிறார்;
"நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில்
இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள்.
அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன
இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை."
[28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)]
  • இவ்வாதம் அறிவியல்வாதமா?
  • அல்லது அடிப்படைவாதமா?
  • தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும்
    தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து
    அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
  • தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள்
    எவ்வாறிருப்பர்?

-01-பரந்து விரிந்த பிரபஞ்சம் முதற் கொண்டு நுண்ணிய அணுவின் கட்டமைப்பு வரையும் ஆய்வு செய்யும் விஞ்ஞானத்தால் ஏன் இறைவனை இதுவரை காண முடியவில்லை?

இறை மறுப்பு கொள்கையாளர்களின் தர்கத்தின் தொனிதான் இது. இதற்கான விடை காண முதலில் நாம் விஞ்ஞான ஆய்வின் தன்மையை அறிய வேண்டும். உலக உயிரினங்களில் மனிதன் உயர்ந்த நிலையை அடைய அவனது ஆறாவது பகுத்தறியும் திறனே தனியொரு காரணம் என்பதை அறிவோம். ஏனைய ஐந்து புலனறிவுகளிலும் மனிதனை விஞ்சிய உயிரினங்கள் ஏராளம் உள்ளன. கழுகுக்கு-பார்வை சக்தியையும், வௌவ்வாலுக்கு-கேட்கும் திறனையும், நாய்க்கு-நுகரும் திறனையும், பூனைக்கு-உணரும் திறனையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். இந்த புலனறிவுகளுக்கு அப்பால் மனிதனுக்கு சிறப்பாக கிடைக்கப்பெற்றுள்ள பகுத்தறியும் திறனை விஞ்ஞானம் எந்தளவு தூரம் தனது ஆய்வில் பிரயோகிக்கிறது என்பதையே இங்கு நாம் ஆராய வேண்டும்.

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

விஞ்ஞானமானது ஒரு உண்மையை ஏற்க, அவ்வுண்மை தனது புலனறிவுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கிறது. இதனை விளங்குவதற்கு விஞ்ஞானத்தின் பண்பை வரைவிலக்கணப்படுதுவது அவசியம் என கருதுகிறேன்.

"விஞ்ஞானமானது வரையறுக்கப்பட்ட கொள்திறன் கொண்ட புலனறிவுகளான ஐந்தறிவுகளுக்குள் அடைபட்டவாறு அவ்வறிவுகளால் உணரக்கூடியவைகளை மாத்திரமே தனது பகுத்தறியும் திறனை பிரயோகித்து ஆய்வு செய்கிறது. மாறாக பகுத்தறியும் திறனை சுதந்திரமாக தனித்து செயல்பட அனுமதி கொடுப்பப்பதில்லை"
[புலனறிவுகள்=பார்வை(கண்), மணம்(மூக்கு), சுவை(நாக்கு),ஓசை(காது), உணர்ச்சி(தோல்)]

என்ற விளக்கத்தையே விஞ்ஞானமாக இங்கு நான் மேற்கோளிட விளைகிறேன். இதற்கு உறுதி சேர்க்கும் சம்பவங்களையும் விஞ்ஞான உலகிலிருந்தே உதாரணங்களாக எடுத்து அடுக்கலாம். மனிதனது புலனறிவுகளால் உணரமுடியாத உண்மைகளை யதார்த்தங்களை கோட்பாடுகளாக முன்வைத்த சில அறிவியல் மேதைகளை "தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்ற ஒரே காரணத்துக்காக எள்ளி நகையாடிய வரலாறுகளை விஞ்ஞான உலகில் பரவலாக காணலாம்.

இன்று உலகம் மாற்று கருத்தில்லாமல் அங்கீகரித்துள்ள மாபெரும் தனியொரு விஞ்ஞான மேதையான அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) கூட ஆரம்ப காலங்களில் புத்தி பேதலித்தவராக உலக விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
காரணம் என்ன?
தனது அதி அபார அறிவைக்கொண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் தான் கணித்த உண்மைகளை உலகிற்கு சமர்ப்பித்த போது அப்போதிருந்த அனைத்து விஞ்ஞானிகளும் முயன்றும் கூட அவரது வாதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. புலனறிவுகளின் இறுக்கமான பிடிக்குள்ளிருந்து விஞ்ஞானிகள் தமது அறிவை பிரயோகித்து அவரது கருத்தை ஆராய்ந்ததால் அத்தலைச்சிறந்த அறிவு மேதையை பைத்தியமாக சித்தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவர் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைகளை உதாசீனப் படுத்திய சம்பவத்தையும் வரலாறே சாட்சி கூறுகிறது. தொடர்ந்து வந்த காலங்களில் விஞ்ஞானத்தின் எழுச்சி அவரது வாதத்தை மெய்ப்பித்து புலனறிவுகளுக்கு எட்ட வைத்த பின்னரே உலகம் அவரை வியந்து நோக்கியது.
இன்றும் வியப்புடனே நோக்குகிறது.
இவ்வாறே அடுத்த பெரும் மேதையான கலிலியோ கலிலி "உலகம் உருண்டை" என்ற வாதத்தை முன் வைத்ததற்காக அவர் பெற்ற மரண தண்டனையும் இதற்கு ஆதாரமாக கூறலாம்.

இவ்வாறான விஞ்ஞானத்தின் இயலாமையை பிரபல விஞ்ஞான ஆய்வாளரான J.W.N. Sullivan பின்வருமாறு கூறுகிறார்.

இப்பேரண்டத்தைப்பற்றிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அறிவியல் சிந்தனையின் வரலாற்றிலேயே மிகவும் மர்மமான ஒன்றாக, பெரும் புதிராக இன்று வரையும் விளங்கிக்கொண்டிருப்பது இப்பேரண்டமாகும். இயற்கையைப்பற்றி தற்காலத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு முந்தையயுகம் அனைத்தையும் விட அதிகமானதே என்றாலும் இதுவும் கூடப் போதுமானதல்ல. ஏனெனில் நாம் இப்பிரபஞ்சத்தில் எங்கு திரும்பினாலும் புதிர்க்களும் முரண்பாடுகளுமாகவே காட்சியளிக்கின்றன.
[J.W.N. Sullivan-The Limitations of Science]

இதிலிருந்து விஞ்ஞானமானது தனது புலனறிவுகளுக்கு எட்டாத நிலையில் உள்ள ஒன்றை குறிப்பிடும் போது "புலனறிவுகளுக்கு அப்பால் அது இல்லை" என்று ஆணித்தரமாக கூற முற்படுவது அறிவீனம் என விளங்கியிருப்பீர்கள். இவ்வாறான விஞ்ஞானத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வை கொண்டு இறைவனை அறியவும் மரணத்தின் பின்னுள்ள மனிதனின் நிலையை அறியவும் முயற்சிக்க வேண்டுமானால் விஞ்ஞானம் தனது நூறு சதவீத ஆய்வையும் நிறைவு செய்து விட்டதாய் உறுதி தர வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறான உறுதி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியப்படலாம். கோடியாண்டுகள் ஆனாலும் படைப்புகள் பற்றிய தேடலே முடியப்போவதில்லை என்ற நிலையில் படைத்தவன் பற்றிய தேடலை விஞ்ஞானம் மூலம் மேற்கொள்வது சாத்தியமில்லை. ஆம் வரையறையான கொள்ளளவுள்ள மனிதனது புலனுறுப்புகளால் இப்பிரபஞ்சத்தின் சகல புதிர்களுக்கும் விடை கண்டு விட முடியாது என்பதே உண்மை.

அறிவியல் மூலம் இறைவனை தேட புறப்பட்ட நான் விஞ்ஞானத்தால் முடியாது என்று கூறுவது உங்களுக்கு குதர்க்கமாக தோன்றலாம். இங்கு நான் தெளிவாக கூற வந்த விடயம் அறிவியலால் முடியாது என்பதல்ல. புலனறிவியலின் சிகரமான விஞ்ஞானத்தால் முடியாது என்பதையே. ஒற்றை வரியில் கூறுவதாயின்,

"அறிவியலின் ஒரு பகுதியே விஞ்ஞானம் அதுவே அறிவியலின் முழு வடிவமல்ல"

என்பதாகும்.அவ்வாறாயின் அறிவியலின் ஏனைய பகுதிகள் என்ன?
நிச்சயம் கேள்வி எழ வேண்டும். எழுவதே அறிவுக்கழகு. ஆம், விஞ்ஞானத்தால் நிரூபிக்க திறனற்றிருப்பவைகள் குறித்து கேள்வி மேல் கேள்விகள் தொடுத்து அவற்றை பகுத்தறிவின் துணை கொண்டு நிறுவும் முயற்சிகளை தொடர வேண்டும். ஆம் புலனறிவுகள் பகுத்தறிவைத்தூண்ட எமக்கு நாமே வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எமது சிந்தனைக்கு நாமாகவே எல்லைக்கோடிடாமல் சிந்தனையை விரியச்செய்ய வேண்டும். அதன் போதே அறிவியல் பூரணமாகும், செய்யாது நிற்பின் அதுவே அடிப்படைவாதமாய் அடையாளப்படுத்தப்படும்.

-03-அறிவியலும் அடிப்படைவாதமும்.

அடிப்படை வாதத்துக்கான இவ்வரைவிலக்கணம் மூலம் உங்களது சிந்தனைகளைத்தூண்டி கேள்விகளைக் கேளுங்கள்.

அறிவை பெறுவதில் தமக்கென சுயமான எல்லைக்கோட்டை வரைந்து அதற்கு வெளியே சிந்திக்க மறுக்கின்ற கூட்டத்தையே அடிப்படை வாதிகள் (fundamentalist) என்ற பதம் குறிக்கின்றது.

இவ்வரைவிலக்கணத் துணையுடன் உலகின் சகல தத்துவங்களையும் ஒப்பு நோக்குங்கள்.
-விஞ்ஞானம்-
தொலைக் காட்டிகளுக்கும் நுணுக்குக் காட்டிகளுக்கும் அகப்படாது விட்டால்,
அல்லது அகப்படாது என நிச்சயமாக தெரிந்தால்
அதுவே உலகின் மிகப்பெரும் புதிராய் இருந்தாலும் சரியே அது பற்றி சிந்திப்பதே வீண் வேலை எனக்கருதுகிறது விஞ்ஞானம்.
சிந்தனைக்கு வரையறை இடும் இவ்வாதம்

  • அறிவியல்வாதமா?
  • அடிப்படைவாதமா?
-நாஸ்திகம்-
இவ்வாறே நாஸ்திகம் பேசியதில் முதன்மையாளரான "தந்தை_பெரியார்" கூறுகிறார்;

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. 28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)


இவ்வறிஞரின் கூற்றை அடையாளப்படுத்துவதற்காக சிந்திக்க வேண்டுகிறேன்.

  • இவ்வாதம் அறிவியல்வாதமா?
  • அல்லது அடிப்படைவாதமா?
  • தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
  • தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள் எவ்வாறிருப்பர்?
எவர் எவ்வாறிருப்பினும் இன்று நாம் மிக ஆழமான தேடலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது கடமை என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம் முழு உலகிடமும் இன்று மிகைத்து நிற்பது மரணத்திற்கு பின் அமையப்போகும் வாழ்க்கை குறித்த அச்சம் கலந்த பார்வையே ஆகும்.


-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.

நீங்களும் கூட இதுவரையும் இறைவனை பல வழிகளிலும் தேடியிருப்பீர்கள். பலத்த தேடல்களுக்கு பிறகும் அவர் கிடைத்திருக்கமாட்டார். அவரை இதுவரை காண முடியாது தோற்று போனோம் என்பதற்காக அதற்கான வழியே இல்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. ஓர் உண்மையை எதார்த்தத்தை காண முடியாமல் போவதால் அவ்வுண்மை பொய்யானது கற்பனையானது என்றாகிவிடாது. இறைவனை தேடிக் காணலாம். ஆனால் நிச்சயமாக வரையறுக்கப்பட்ட கொள்ளளவுள்ள புலனறிவுகளால் முடியாது. இங்கிருந்துதான் முழு வீச்சில் எமது பகுத்தறிவிற்கு முழு சுதந்திரம் கொடுத்து தேட வேண்டும். ஆம் என்னுடன் பயணியுங்கள்.

நீங்கள் நாஸ்திகராக இருக்கலாம் இறைவன் மீதான நம்பிக்கைகளைப்பற்றி இதுவரையும் கவலைப்படாதவராக இருந்திருக்கலாம். அல்லது ஏதேனும் மத கோட்பாடுகளில் ஒன்றை பின்பற்றுபவராக இருக்கலாம். பொதுவுடமைவாதியாகவோ அல்லது ஜனநாயகம் மற்றும் ஏதேனும் கொள்கைகளில் ஆர்வமுடையவராக இருக்கலாம். இவ்வுலக பார்வையில் இவ்வாறான சுதந்திரமுடையவனாக இருப்பதில் தவறில்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
என்றாலும் இச்சுதந்திரத்துடன் நில்லாது,

  • இவ்வுலகிற்கு பின் நமது நிலை என்ன?
  • ஏதேனும் சம்பவங்கள் நடக்குமா?
  • அல்லது எதுவுமே இல்லையா?
நாம் இது பற்றிய தேடலை எமது விருப்புடனோ அல்லது விருப்பற்ற நிலையிலோ செய்ய வேண்டியது கடமையாகவே உள்ளது. காரணம், மரணத்தின் பின்னான வாழ்க்கை குறித்தும், இறைவனை நிராகரிப்பதால் அங்கு கிடைக்கும் முடிவேயில்லாத படு பயங்கரமான வேதனைகள் குறித்தும் அச்சத்துடன் நடுங்கச் செய்யும் எச்சரிக்கைகள் எமது கைகளுக்கு கிடைத்துள்ளது. இச்செய்திகளைத் தந்தவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு அஞ்சாது துணிந்து எழுந்து தமது உலக வாழ்வையும் உயிரையும் துச்சமென கருதியே எம்மிடம் சமர்பித்துள்ளனர்.
இவ்வுலகில் அவர்களுக்கு எந்த பயனும் பெற்றுத்தராத ஒரு செயலை, பெரும் சமூக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தமது நிம்மதியிழந்து ஏன் செய்தனர்? இந்த ஒரு காரணம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்ததாக கூறி வாதங்களை முன் வைத்தவர்களை நாம் அணு அணுவாக ஆராய வேண்டும் என்பதை உணர்த்த போதுமானதல்லவா? அது ஆதாம் முதல் இந்நூற்றாண்டு வரையுமுள்ளவர்களாக இருக்கட்டும். அவர்களது வரலாறுகளை மட்டுமல்ல அவர்கள் சமர்பித்த கருத்துகளையும் முன்னெடுத்த வாதங்களையும் பகுத்தறிவு கொண்டு துல்லியமாக ஆராய வேண்டும்.
மேலும், இதுவரையும் இறைவன் குறித்து பேசிய யூத, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் மதங்களாகட்டும் அனைத்தையும் அணு அணுவாக ஆய்ந்து மெய்பிப்பதையும் பொய்பிப்பதையும் எமது பகுத்தறிவிற்கு சுதந்திரமாக விட வேண்டும்.
  • இவ்வாய்வும் அறிவியலின் மறு பகுதியல்லவா?
  • புலனறிவைக்கொண்டு பெறும் அறிவு அறிவின் ஒரு பகுதியே என்பதையும் அதைக்கடந்தும் சிந்திக்கவேண்டிய பெரும் பகுதி உள்ளதையும் ஏன் எமது பகுத்தறிவு உணரத்தவறுகிறது?

-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?

ஆக நாஸ்திகர்களுக்கு நான் வாதத்திற்காக கூற விரும்புவது, நண்பர்களே இறைவன் இல்லையெனின் பாதிப்பேதும் இல்லை. சிந்தனைக்கு என்றுமே இரண்டு பக்கங்கள் உண்டல்லவா? இங்கு நாம் அடுத்த பக்கமாக சிந்திக்க வேண்டியது தவறுதலாகவேனும் இருந்து விட்டால் எமது நிலை என்ன? இந்த கேள்வியை உங்களுக்குள் கேட்பதன் மூலம் இறைவன் இல்லை என்பதையும் கூட தான்தோன்றித்தனமாக அல்லாமல் ஆய்வின் மூலமே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அது எவ்வாறு நாஸ்திகத்தை ஆய்வு செய்வது? என்ற கேள்வி எழலாம். இறை மதங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்தையும் உங்கள் மனசாட்சி "பொய்" என்று தெளிவாக கூறும் வரையும் அவற்றை ஆய்வு செய்யுங்கள். சகல மத அறிஞர்களிடமும் மனதில் தோன்றும் அனைத்து கேள்விகளுக்கும் தயங்காது விளக்கம் கேளுங்கள்.

  • இறைவன் உள்ளானா?
நிச்சயமாக தெளிவு கிடைக்கும்.

-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும் தலைப்பு.

(நபியே) உம்மை(முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக)மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராகவும் (அவனையும் இத்தூதரையும் நிராகரிப்பதன் கடுமையான வேதனைகள் குறித்தும்) அச்சுறுத்தி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.(அல்குர்ஆன்-34.28)

என்ற வாதத்துடன் திருக்குர்ஆனின் துணை கொண்டு பிரச்சாரம் செய்து வெற்றி கண்ட முஹம்மத்(ஸல்) அவர்களையும் அவர்கள் முன்வைத்த கொள்கை கோட்பாடுகளையுமே. இவ்வாறான இன்னும் அதிகளவானோர் வரலாற்றில் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டதாக கூறியவர்கள், கூறிக்கொண்டிருப்பவர்களும் உள்ளனர். அவர்கள் குறித்த தேடல்களையும் விரிவுபடுத்துங்கள். அவைகளையும் இவரது வாதத்துடன் ஒப்பிட்டு நோக்குங்கள். (தகவல்கள் உள்ளோர் முடிந்தால் இவ்வாறான சிந்தனைக்குரிய அறிவியல் முறையில் வலைப்பதிவாக்கி தரும்போது அவைகளுக்கும் இத்தளம் தொடுப்பு கொடுக்கும் என்ற உறுதியை தருகிறேன். இத்தளத்தின் கருத்து பரிமாற்றத்துக்கான பகுதி திறந்தே உள்ளது.)

-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.

  • உலகின் அறிவியல் துறைகளான வரலாறு, பொருளியல், விஞ்ஞானம் என நீண்டு செல்லும் உலகின் அனைத்து துறைகளையும் ஆழமாக ஆராய்ந்து அவைகளை தன்னுடன் ஒப்பிட்டு உறுதிபடுத்த சொல்கிறது இறைவழி காட்டியான திருக்குர்ஆன்.
  • மேலும் 70 வருடங்கள் வணங்குவதை விடவும் ஒரு மணி நேரம் கல்வியை தேடுவதை உயர்வாக கூறுகிறது நபிகளாரின் வாக்கு.
  • ஆராய்சியே மனிதனின் கடமை அது இன்றி இறைவனை நிராகரிக்க முனைவீர்களாயின் நரகவேதனை நிச்சயம் என ஆய்வுகளை வேண்டுகிறது இஸ்லாம்.

இனி இவ் இஸ்லாத்துடன் விஞ்ஞானம், நாஸ்திகம் என்பவைகளையும் மனிதர்களால் எழுதப்பட்ட வெற்றுத்தத்துவங்களையும் சுயமாக நீங்களே ஒப்பிடுங்கள்.
  • இதில் எது அறிவியல்வாதம்?
  • எது அடிப்படைவாதம்?
  • இன்று உலகில் யார் அடிப்படைவாதிகள்?
  • உலகம் யாரை அழகாக திட்டமிட்டு அடிப்படைவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கிறது?
உலக மக்கள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். மரணத்தின் பின்னான முடிவில்லாத வாழ்க்கை குறித்த நீதமான ஆய்வை செய்யுங்கள்.

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அவ்வாறல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.-(அல்குர்ஆன்-16:38. )

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், "எங்கள் கேடே! நாங்கள் திரும்ப(வும் உலகிற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்(நம்பிக்கையுடையவர்)களாக இருப்போம்" எனக் கூறுவதைக் காண்பீர்.(அல்குர்ஆன்-6:27)

இங்கு நான் இஸ்லாத்தை கண் மூடி நம்புமாறு வலியுறுத்தவில்லை. இனியும் அதற்கான முயற்சிகளை செய்யப்போவதுமில்லை. அது எனது ஆற்றலுக்குட்பட்ட விடயமுமல்ல. மாறாக அத்தாட்சிகளை ஆய்வு செய்யுமாறே வலியுறுத்துகிறேன். எனக்கு கிடைத்த தெளிவை உலகிற்கு அறியப்படுத்துவதை மட்டுமே என் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இக்கடமையை செய்ய என்னைத் தூண்டுவது மரணத்திற்கு பின்னுள்ள பயம் மட்டுமே. இக்கடமைக்கும் இஸ்லாம் எல்லை வைத்துள்ளது அதைத்தாண்டும் நோக்கமும் நிச்சயம் எனக்கில்லை.

ஆயினும் (இஸ்லாத்தை உண்மையென கண்டும்) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை (அல்குர்ஆன்-80:7)


-08-இறைவனைத் தேடும் அறிவியலுக்கான திறப்பு எங்கே?

NASA வானியல் ஆய்வாளர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான கலாநிதி மைக்கேல் எச். ஹார்ட் இதுவரை உலகில் செல்வாக்கு செலுத்திய நூறு நபர்களின் பட்டியலில் முதன்மையானவராக முஹம்மத்(ஸல்) அவர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இங்கு ஆராயப்பட வேண்டிய விடயம் இவரது முடிவையல்ல. இவர் இம்முடிவுக்கு வரக் கூறும் காரணத்தையே ஆகும். கேளுங்கள்.

"இதுவரையுமான மனித சரித்திரத்தில் சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் அவர் ஒருவரே. அதாவது இவர் சிறந்த அரச இராஜதந்திரியாகவும், திறனுள்ள பேச்சாளராகவும் சட்ட வல்லுனராகவும், பொருளியலாளராகவும், தத்துவ ஞாநியாகவும் சீர்திருத்த வாதியாகவும் மற்றும் இராணுவத்தளபதியாகவும் கூட ஒரே நேரத்தில் இருந்து வெற்றியடைந்துள்ளார்.
[Dr.M.H. Hart- The 100: A Ranking of the Most Influential Persons in History, New York, 1978, pp. 33]

இவரது இக்கூற்று மாற்று கருத்துக்கு இடம் தராத உண்மையே. ஆனால் இவ்வதிசய சாதனை நிகழ்த்திய கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் இதற்கு கூறிய காரணம் என்ன?
"தனது முழு செயலுக்குமான காரணம் இறைவனையே சாரும்; அவனது கட்டளைப்படி தான் நடந்ததைத் தவிர தன்னிடம் எதுவுமில்லை"
என்று வாதிடுகிறார்.
  • இவரது வாதத்தின் தன்மையை அணுவணுவாகக் ஆராய்வதை ஏன் அறிவியலாகக் கொள்ளக் கூடாது?
  • இக்கேள்வியை அடிப்படை வாதமாக்க முனையும் சூழ்ச்சிக்கு காரணம் யார்? ஏன்?
இவ்வதிசய மனிதர் தொடர்ந்தும் கூறுகிறார்.

பிரபஞ்சத்தின் ஒரே அதிபதியான அல்லாஹ்விடமிருந்து உலக மக்களுக்கு அருளப்பட்டதே திருக்குர்ஆன் என்பதாக. இவ்வாதத்தை பொய்ப்பிக்கும், மெய்ப்பிக்கும் நோக்குடன் ஆராய்ந்த பல்லாயிர கணக்கான அறிவியலாளர்களில் ஒருவரும் குடலியல், இரைப்பை துறைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்றவருமான, பிரெஞ்சு Dr. மாரீஸ் புகைல் தனது நூலில் வினவுகிறார்.

"கல்வி அறிவில்லாத ஒருவர் இற்றைக்கும் இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராக திடீரென எவ்வாறு ஆக முடிந்தது?
அது மட்டுமல்ல அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித்துல்லியமாக தெரிவிக்க முடிந்தது?"
[Dr. Maurice Bucaille - author of "The Bible, the Quran and Science" 1978, p. 125]

இன்றைய உலகே வியந்து நிற்கும் இக்கேள்விகளுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே இத்திருக்குர்ஆன் பதிலளித்துள்ளது.
இது, (அல்லாஹ்வின்)சிறப்பான வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (திருக்குர்ஆன்-2:2)


அவர்(முஹம்மத்) தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ (இறைவனிலிருந்து தூது) மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன்-53:3,4)
  • இறைவனைக்காணும் பயணத்தில் கேள்விகள் பல தூண்டும் இக்குர்ஆனை ஆய்வு செய்வதை ஏன் அறிவியலாகக் காண எமது சிந்தனை மறுக்கிறது?

தெளிவான அறிவைக் கொண்டு தொடர்ந்தும் பயணியுங்கள். ஏனெனில் திருக்குர்ஆன் கூறுகிறது.

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன்-2:99)

நிச்சயமாக அடியார்களில் இறைவனுக்கு அதிகம் பயப்படுபவர்கள் அறிவுடையவர்களே. (35:28)


இங்கு மூளைச்சலவை எனது நோக்கமல்ல; இஸ்லாத்தில் இதற்கான அவசியமில்லை என்பதை விளக்க மேலுள்ள வசனம் போதுமென கருதுகிறேன். காரணம் சிந்திக்குமளவு வளர்ந்திராத சிறுவர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் நிச்சயமான சுவனம் உள்ளதான அறிவித்தல் உள்ளது. தெளிவான சிந்தனயுள்ளவர்களே ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளனர். மனிதப்படைப்பின் நோக்கமும் அவனது அறிவை சோதிப்பதே என்பதை இறைவனின் வசனமான (இக்கூற்றை ஆய்வு செய்வதே இத்தளத்தின் முதன்மை நோக்கம்) திருகுர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகிறது.

(ஆண்,பெண்) கலப்பு இந்திரியத்திலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.(76.2)

எவர் (உண்மை எனக் கண்ட பின்னும்) நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். (குர்ஆன்-41:41)


-09-இத்தளம் ஆழமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கும் விடயங்கள்.


முஹம்மத்(ஸல்)அவர்கள் இறைவனிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக கூறி உலகிற்கு சமர்ப்பித்த திருக்குர்ஆனின் வரலாற்றையும் அது பேசும் விடயங்களான:-

  • உலக வரலாறு, சட்டங்கள் என்பதுடன்,

  • உலகில் நிருபிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பற்றியும்,

  • ஆறாம் நூற்றாண்டில் எழுதவும், வாசிக்கவும் தெரியாது வாழ்ந்த மனிதரால் எவ்விதத்திலும் யூகிக்கவே முடியாத பிரபஞ்சத்தின் பால் மண்டல வீதிகள் முதல்,

  • தாயின் கருவறையினுள் குழந்தை வளரும் படிமுறைகள் எனவும் இன்னும்,

  • ஆணின் முள்ளந்தண்டிலிருந்து உற்பத்தியாகும் விந்து வரையும் பேசியுள்ள சிக்கலான விஞ்ஞான விடயங்களை பற்றியும் ஆராயும்.

இவ்வளவையும் கூறிய பின் "முடிந்தால் இவ்வசனங்களை பொய்ப்பித்து காட்டுமாறு" கூறும் அல்குர்ஆனின் நெஞ்சுரத்தையும் இன்னும்,

அவர்கள் இந்த குர்ஆனை(கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன்-4:82)

என்று கூறும் அல்குர்ஆனின் சிறப்புகள் பல வற்றையும் ஆராயும். மேலும்,

  • உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களான Oxford மற்றும் Cambridge என்பனவற்றில் திருக்குர்ஆனை ஆராய்வதற்கென்றே அரபு மொழியில் தனித்துறை அமைத்து ஆராய்ச்சி செய்ய காரணம் என்ன?

  • வேறு எந்த புத்தகமாவது இவ்வாறு பல நூற்றாண்டுகளாக முற்றுப்பெறாது தொடர்ந்து ஆய்வுக்குட் பட்டதுண்டா?

  • இதை ஆராய்ந்தவர்கள் என்ன கூறினார்கள்?
இக்கேள்விகளும் அறிவு பூர்வமாக மிகத்தகுந்த ஆதாரங்களுடன் அலசப்படும்.

அதைத்தொடர்ந்து

  • "தாம் இறைவனது தூதர் என்றும் அல்குர்ஆன் உலக மக்களுக்காக அவனால் அருளப்பட்டது" என்றும் வாதம் புரிந்து அதில் வெற்றியும் கண்ட முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றியும்,

  • ஆழமாக அவரை ஆராய்ந்த உலகம் என்ன கண்ணோட்டத்துடன் நோக்குகிறது
என்பதையும் அலசும்.

"அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது இன்னும் பல பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்புகிறதே தவிர பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இல்லை. மேலும் உலக வரலாற்றில் மேற்குலகில் முஹம்மதைப்போல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை"
[Muhammad at Mecca, Oxford 1953, P.52]

  • இவ்வாறு ஏன் இன்றைய உலக பல்கலைகழகங்களின் சக்கரவர்த்தியான Oxford ன் ஆய்வறிக்கை கூறுகிறது?

  • அவரை கண்மூடி பொய்யர் எனக்கூறுவது எவ்வாறு இன்னும் பல கேள்விகளை உருவாக்குகிறது?

  • அவ்வாறு நம்ப வைப்பதில் என்னென்ன சிக்கல்களை உருவாக்குகிறது?

  • உலக மக்களிடம் அவர் எவ்வாறு பரப்புரை செய்யப்படுகிறார்.

  • ஆழமான ஆராய்வாளர்கள் அவரை எவ்வாறு காண்கின்றனர்

  • அப்படி என்ன சிறப்புதான் அச்சாதாரண மனிதரிடம் உள்ளது?
நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.
[மகாத்மா காந்தி-youn India, quoted in the light, lahore, for 16th September 1924.]

  • இவ்வாறான சிறப்பு மிக்க மனிதர் செய்த பிரச்சாரந்தான் என்ன?

  • அவர் உலகிற்கு புதிதாக என்ன கூற வந்தார்?


மிகத் தகுந்த ஆதாரங்களுடன் இவ்வாறான இன்னும் பல கேள்விகளுடன் இவரைப்பற்றி அலசப்படும்.

இவ்விதமே இஸ்லாத்துடன் தொடர்புடைய ஏனைய அனைத்து விடயங்களும் (விமர்சனங்கள் உட்பட) மிக ஆழமாக அறிவார்ந்த முறையில் அணு அணுவாக ஆராயப்படும்.

இங்கு திருக்குர்ஆனையும், முஹம்மத்(ஸல்) அவர்களையும் தனியாக சிறப்பித்துக்காட்ட காரணம். இஸ்லாத்தின் சட்டங்கள் அல்குர்ஆனில் இருந்தும், முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தும் மட்டுமே பெறப்பட வேண்டும் என்பதனாலேயே. உலகமே மதிக்கும் இஸ்லாமிய அறிஞராக இருந்தாலும் கூட அவரது கருத்துகள் இவை இரண்டிலிருந்தும் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படும் போதே பின்பற்றுவது முஸ்லிம்களுக்கு கடமை இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் அறிந்து ஏற்றுக்கொண்ட விடயமே இது என்பதையும் எனது தொடரும் கட்டுரைகள் மூலம் விளங்குவீர்கள்.




-10-கட்டுரைச் சுருக்கம்.

  • மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றிய அச்சமே இறைவனை பற்றிய ஆய்விற்கு உட்படுத்துகிறது.

  • அவ் இறைவனை புலனுறுப்புகளால் நிச்சயமாக காண முடியாது.

  • இவ்வாறு புலனுறுப்புகளுக்கு தென்படாது இப்பிரபஞ்சத்தில் மறைந்திருக்க மர்மங்களே இல்லை என்ற வாதம் அறிவீனம். தினந்தோறும் புதுப்புது மர்மங்கள் அவிழ்க்கப்பட்டே வருகின்றன.

  • இதனை ஆதாரமாக கொண்டு நூறு வீத இலக்கையும் விஞ்ஞானம் தொட்டு விட்டதாய் உறுதி தரும் போதே விஞ்ஞானத்திலிருந்து இறைவனை தேடுவது சாத்தியம்.ஆகவே பகுத்தறிவை முழு வீச்சுடன் பிரயோகித்தே இது குறித்த ஆராய்வை மேற்கொள்ள வேண்டும்.

  • மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என நிறுவுவதற்கு ஆதாரம் தேவை என்பது போலவே மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை என்பதற்கும் ஆதாரம் கட்டாயத்தேவையாகும்.(மரணத்திற்கு பின்னுள்ள நிலை குறித்து தேடலே இல்லாது தெரியாது என்று விலகுவது அறிவீனமாகும்.)

  • ஆஸ்திகத்தை நிரூபிக்க இறை வழிகாட்டல் உண்டு (ஒரே இறைவன் உள்ளான் என்பதை முஹம்மத்(ஸல் அவர்கள் சமர்ப்பித்த கோட்பாடுகளை கொண்டு 100% ஒவ்வொருவரது பகுத்தறிவும் சரி என காணும் வரையும், இனி மாற்று கேள்விகளே இல்லை என்ற நிலைக்கு நீங்கள் வரும் வரையும் இறைவனது துணை கொண்டு நிரூபிப்பேன் என உறுதி தருகிறேன்.)

  • நாஸ்திகத்தை நிரூபிக்க ஆதாரம் உண்டா? யார் உள்ளார்? வழி முறைகள் எவ்வாறு? (அவ்வாறே பகுத்தறிவு ஆதாரங்களைக்கொண்டு நாஸ்திகத்தையோ பல கடவுள் கொள்கைகளையோ நிரூபிக்கும் தகைமையுடையவர்களையும் இத்தளத்துடன் துணையாக அணைத்து செல்ல விரும்புகிறேன். இன்னும் எனது வாதத்தை அவை வலுப்படுத்தும் உதவும் என்பதால்.)

  • தேடலே இல்லாது இது பற்றிய அறிவு தம்மிடம் இல்லை எனக்கூறுவது வடித்தெடுத்த அடிப்படைவாதம் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.