-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?



பரந்து விரிந்த பிரபஞ்சம் முதற் கொண்டு நுண்ணிய அணுவின் கட்டமைப்பு வரையும் ஆய்வு செய்யும் விஞ்ஞானத்தால் ஏன் இறைவனை இதுவரை காண முடியவில்லை?

இறை மறுப்பு கொள்கையாளர்களின் தர்கத்தின் தொனிதான் இது. இதற்கான விடை காண முதலில் நாம் விஞ்ஞான ஆய்வின் தன்மையை அறிய வேண்டும். உலக உயிரினங்களில் மனிதன் உயர்ந்த நிலையை அடைய அவனது ஆறாவது பகுத்தறியும் திறனே தனியொரு காரணம் என்பதை அறிவோம். ஏனைய ஐந்து புலனறிவுகளிலும் மனிதனை விஞ்சிய உயிரினங்கள் ஏராளம் உள்ளன. கழுகுக்கு-பார்வை சக்தியையும், வௌவ்வாலுக்கு-கேட்கும் திறனையும், நாய்க்கு-நுகரும் திறனையும், பூனைக்கு-உணரும் திறனையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். இந்த புலனறிவுகளுக்கு அப்பால் மனிதனுக்கு சிறப்பாக கிடைக்கப்பெற்றுள்ள பகுத்தறியும் திறனை விஞ்ஞானம் எந்தளவு தூரம் தனது ஆய்வில் பிரயோகிக்கிறது என்பதையே இங்கு நாம் ஆராய வேண்டும். இவ்வாய்வின் மூலம் குறுகிய வட்டத்தினுள் இருந்து வீரம் பேசும் விஞ்ஞானத்தின் அறியாமையை தெளிவாகவே அடையாளப்படுத்டுத்துவதுடன், விஞ்ஞானம் அறிவியலின் ஒரு பகுதியே தவிர விஞ்ஞானமே அறிவியலின் முழு வடிவமல்ல என்பதையும் சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.


-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.


விஞ்ஞானமானது ஒரு உண்மையை ஏற்க, அவ்வுண்மை தனது புலனறிவுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கிறது. இதனை விளங்குவதற்கு விஞ்ஞானத்தின் பண்பை வரைவிலக்கணப்படுதுவது அவசியம் என கருதுகிறேன்.

"விஞ்ஞானமானது வரையறுக்கப்பட்ட கொள்திறன் கொண்ட புலனறிவுகளான ஐந்தறிவுகளுக்குள் அடைபட்டவாறு அவ்வறிவுகளால் உணரக்கூடியவைகளை மாத்திரமே தனது பகுத்தறியும் திறனை பிரயோகித்து ஆய்வு செய்கிறது. மாறாக பகுத்தறியும் திறனை சுதந்திரமாக தனித்து செயல்பட அனுமதி கொடுப்பப்பதில்லை"
[புலனறிவுகள்=பார்வை, மணம்(மூக்கு), சுவை(நாக்கு),ஓசை(காது), உணர்ச்சி(தோல்)]

என்ற விளக்கத்தையே விஞ்ஞானமாக இங்கு நான் மேற்கோளிட விளைகிறேன். இதற்கு உறுதி சேர்க்கும் சம்பவங்களையும் விஞ்ஞான உலகிலிருந்தே உதாரணங்களாக எடுத்து அடுக்கலாம். மனிதனது புலனறிவுகளால் உணரமுடியாத உண்மைகளை யதார்த்தங்களை கோட்பாடுகளாக முன்வைத்த சில அறிவியல் மேதைகளை "தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்ற ஒரே காரணத்துக்காக எள்ளி நகையாடிய வரலாறுகளை விஞ்ஞான உலகில் பரவலாக காணலாம்.

இன்று உலகம் மாற்று கருத்தில்லாமல் அங்கீகரித்துள்ள மாபெரும் தனியொரு விஞ்ஞான மேதையான அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) கூட ஆரம்ப காலங்களில் புத்தி பேதலித்தவராக உலக விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
காரணம் என்ன?
தனது அதி அபார அறிவைக்கொண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் தான் கணித்த உண்மைகளை உலகிற்கு சமர்ப்பித்த போது அப்போதிருந்த அனைத்து விஞ்ஞானிகளும் முயன்றும் கூட அவரது வாதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. புலனறிவுகளின் இறுக்கமான பிடிக்குள்ளிருந்து விஞ்ஞானிகள் தமது அறிவை பிரயோகித்து அவரது கருத்தை ஆராய்ந்ததால் அத்தலைச்சிறந்த அறிவு மேதையை புத்தி பேதலித்தவராக சித்தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவர் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைகளை உலகம் உதாசீனப் படுத்திய சம்பவங்களையும் வரலாறே சாட்சி கூறுகிறது. தொடர்ந்து வந்த காலங்களில் விஞ்ஞானத்தின் எழுச்சி அவரது வாதத்தை மெய்ப்பித்து புலனறிவுகளுக்கு எட்ட வைத்த பின்னரே உலகம் அவரை வியந்து நோக்கியது.
இன்றும் வியப்புடனே நோக்குகிறது.
இவ்வாறே அடுத்த பெரும் மேதையான கலிலியோ கலிலி "உலகம் உருண்டை" என்ற வாதத்தை முன் வைத்ததற்காக அவர் பெற்ற மரண தண்டனையும் இதற்கு ஆதாரமாக கூறலாம்.

இவ்வாறான விஞ்ஞானத்தின் இயலாமையை பிரபல விஞ்ஞான ஆய்வாளரான J.W.N. Sullivan பின்வருமாறு கூறுகிறார்.

இப்பேரண்டத்தைப்பற்றிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அறிவியல் சிந்தனையின் வரலாற்றிலேயே மிகவும் மர்மமான ஒன்றாக, பெரும் புதிராக இன்று வரையும் விளங்கிக்கொண்டிருப்பது இப்பேரண்டமாகும். இயற்கையைப்பற்றி தற்காலத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு முந்தையயுகம் அனைத்தையும் விட அதிகமானதே என்றாலும் இதுவும் கூடப் போதுமானதல்ல. ஏனெனில் நாம் இப்பிரபஞ்சத்தில் எங்கு திரும்பினாலும் புதிர்க்களும் முரண்பாடுகளுமாகவே காட்சியளிக்கின்றன.
[J.W.N. Sullivan-The Limitations of Science]

இதிலிருந்து விஞ்ஞானமானது தனது புலனறிவுகளுக்கு எட்டாத நிலையில் உள்ள ஒன்றை குறிப்பிடும் போது "புலனறிவுகளுக்கு அப்பால் அது இல்லை" என்று ஆணித்தரமாக கூற முற்படுவது அறிவீனம் என விளங்கியிருப்பீர்கள். ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொள்வோம், இவ்வாறான விஞ்ஞானத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வை கொண்டு இறைவனை அறியவும் மரணத்தின் பின்னுள்ள மனிதனின் நிலையை அறியவும் முயற்சிக்க வேண்டுமானால் விஞ்ஞானம் தனது நூறு சதவீத ஆய்வையும் நிறைவு செய்து விட்டதாய் உறுதி தர வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறான உறுதி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியப்படலாம். கோடியாண்டுகள் ஆனாலும் படைப்புகள் பற்றிய தேடலே முடியப்போவதில்லை என்ற நிலையில் படைத்தவன் பற்றிய தேடலை விஞ்ஞானம் மூலம் மேற்கொள்வது சாத்தியமில்லை. ஆம் வரையறையான கொள்ளளவுள்ள மனிதனது புலனுறுப்புகளால் இப்பிரபஞ்சத்தின் சகல புதிர்களுக்கும் விடை கண்டு விட முடியாது என்பதே உண்மை.

அறிவியல் மூலம் இறைவனை தேட புறப்பட்ட நான் விஞ்ஞானத்தால் முடியாது என்று கூறுவது உங்களுக்கு குதர்க்கமாக தோன்றலாம். இங்கு நான் தெளிவாக கூற வந்த விடயம் அறிவியலால் முடியாது என்பதல்ல. புலனறிவியலின் சிகரமான விஞ்ஞானத்தால் முடியாது என்பதையே. ஒற்றை வரியில் கூறுவதாயின்,

"அறிவியலின் ஒரு பகுதியே விஞ்ஞானம் அதுவே அறிவியலின் முழு வடிவமல்ல"

என்பதாகும்.அவ்வாறாயின் அறிவியலின் ஏனைய பகுதிகள் என்ன?
நிச்சயம் கேள்வி எழ வேண்டும். எழுவதே அறிவுக்கழகு. ஆம், விஞ்ஞானத்தால் நிரூபிக்க திறனற்றிருப்பவைகள் குறித்து கேள்வி மேல் கேள்விகள் தொடுத்து அவற்றை பகுத்தறிவின் துணை கொண்டு நிறுவும் முயற்சிகளை தொடர வேண்டும். ஆம் புலனறிவுகள் பகுத்தறிவைத்தூண்ட எமக்கு நாமே வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எமது சிந்தனைக்கு நாமாகவே எல்லைக்கோடிடாமல் சிந்தனையை விரியச்செய்ய வேண்டும். அதன் போதே அறிவியல் பூரணமாகும், செய்யாது நிற்பின் அதுவே அடிப்படைவாதமாய் அடையாளப்படுத்தப்படும்.




அடுத்த ஆய்வுக்கு , அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.



உங்களது கருத்துகள்.