-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.


அடிப்படை வாதத்துக்கான இவ்வரைவிலக்கணம் மூலம் உங்களது சிந்தனைகளைத்தூண்டி கேள்விகளைக் கேளுங்கள்.

அறிவை பெறுவதில் தமக்கென சுயமான எல்லைக்கோட்டை வரைந்து அதற்கு வெளியே சிந்திக்க மறுக்கின்ற கூட்டத்தையே அடிப்படை வாதிகள் (fundamentalist) என்ற பதம் குறிக்கின்றது.

இவ்வரைவிலக்கணத் துணையுடன் உலகின் சகல தத்துவங்களையும் ஒப்பு நோக்குங்கள்.


-விஞ்ஞானம்-
தொலைக் காட்டிகளுக்கும் நுணுக்குக் காட்டிகளுக்கும் அகப்படாது விட்டால்,
அல்லது அகப்படாது என நிச்சயமாக தெரிந்தால்
அதுவே உலகின் மிகப்பெரும் புதிராய் இருந்தாலும் சரியே அது பற்றி சிந்திப்பதே வீண் வேலை எனக்கருதுகிறது விஞ்ஞானம்.
சிந்தனைக்கு வரையறை இடும் இவ்வாதம்

  • அறிவியல்வாதமா?
  • அடிப்படைவாதமா?
-நாஸ்திகம்-
இவ்வாறே நாஸ்திகம் பேசியதில் முதன்மையாளரான "தந்தை_பெரியார்" கூறுகிறார்;

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. 28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)


இவ்வறிஞரின் கூற்றை அடையாளப்படுத்துவதற்காக சிந்திக்க வேண்டுகிறேன்.

  • இவ்வாதம் அறிவியல்வாதமா?
  • அல்லது அடிப்படைவாதமா?
  • தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
  • தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள் எவ்வாறிருப்பர்?
எவர் எவ்வாறிருப்பினும் இன்று நாம் மிக ஆழமான தேடலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது கடமை என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம் முழு உலகிடமும் இன்று மிகைத்து நிற்பது மரணத்திற்கு பின் அமையப்போகும் வாழ்க்கை குறித்த அச்சம் கலந்த பார்வையே ஆகும்.


-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.

நீங்களும் கூட இதுவரையும் இறைவனை பல விஞ்ஞான வழிகளிலும் தேடியிருப்பீர்கள். பலத்த தேடல்களுக்கு பிறகும் அவர் கிடைத்திருக்கமாட்டார். அவரை இதுவரை காண முடியாது தோற்று போனோம் என்பதற்காக அதற்கான வழியே இல்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. ஓர் உண்மையை எதார்த்தத்தை காண முடியாமல் போவதால் அவ்வுண்மை பொய்யானது கற்பனையானது என்றாகிவிடாது. இறைவனை தேடிக் காணலாம். ஆனால் நிச்சயமாக வரையறுக்கப்பட்ட கொள்ளளவுள்ள புலனறிவுகளால் முடியாது. இங்கிருந்துதான் முழு வீச்சில் எமது பகுத்தறிவிற்கு முழு சுதந்திரம் கொடுத்து தேட வேண்டும். ஆம் என்னுடன் பயணியுங்கள்.

நீங்கள் நாஸ்திகராக இருக்கலாம் இறைவன் மீதான நம்பிக்கைகளைப்பற்றி இதுவரையும் கவலைப்படாதவராக இருந்திருக்கலாம். அல்லது ஏதேனும் மத கோட்பாடுகளில் ஒன்றை பின்பற்றுபவராக இருக்கலாம். பொதுவுடமைவாதியாகவோ அல்லது ஜனநாயகம் மற்றும் ஏதேனும் கொள்கைகளில் ஆர்வமுடையவராக இருக்கலாம். இவ்வுலக பார்வையில் இவ்வாறான சுதந்திரமுடையவனாக இருப்பதில் தவறில்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
என்றாலும் இச்சுதந்திரத்துடன் நில்லாது,

  • இவ்வுலகிற்கு பின் நமது நிலை என்ன?
  • ஏதேனும் சம்பவங்கள் நடக்குமா?
  • அல்லது எதுவுமே இல்லையா?
நாம் இது பற்றிய தேடலை எமது விருப்புடனோ அல்லது விருப்பற்ற நிலையிலோ செய்ய வேண்டியது கடமையாகவே உள்ளது. காரணம், மரணத்தின் பின்னான வாழ்க்கை குறித்தும், இறைவனை நிராகரிப்பதால் அங்கு கிடைக்கும் முடிவேயில்லாத படு பயங்கரமான வேதனைகள் குறித்தும் அச்சத்துடன் நடுங்கச் செய்யும் எச்சரிக்கைகள் எமது கைகளுக்கு கிடைத்துள்ளது. இச்செய்திகளைத் தந்தவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு அஞ்சாது துணிந்து எழுந்து தமது உலக வாழ்வையும் உயிரையும் துச்சமென கருதியே எம்மிடம் சமர்பித்துள்ளனர்.
இவ்வுலகில் அவர்களுக்கு எந்த பயனும் பெற்றுத்தராத ஒரு செயலை, பெரும் சமூக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தமது நிம்மதியிழந்து ஏன் செய்தனர்? இந்த ஒரு காரணம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்ததாக கூறி வாதங்களை முன் வைத்தவர்களை நாம் அணு அணுவாக ஆராய வேண்டும் என்பதை உணர்த்த போதுமானதல்லவா? அது ஆதாம் முதல் இந்நூற்றாண்டு வரையுமுள்ளவர்களாக இருக்கட்டும். அவர்களது வரலாறுகளை மட்டுமல்ல அவர்கள் சமர்பித்த கருத்துகளையும் முன்னெடுத்த வாதங்களையும் பகுத்தறிவு கொண்டு துல்லியமாக ஆராய வேண்டும்.
மேலும், இதுவரையும் இறைவன் குறித்து பேசிய யூத, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் மதங்களாகட்டும் அனைத்தையும் அணு அணுவாக ஆய்ந்து மெய்பிப்பதையும் பொய்பிப்பதையும் எமது பகுத்தறிவிற்கு சுதந்திரமாக விட வேண்டும்.
  • இவ்வாய்வும் அறிவியலின் மறு பகுதியல்லவா?
  • புலனறிவைக்கொண்டு பெறும் அறிவு அறிவின் ஒரு பகுதியே என்பதையும் அதைக்கடந்தும் சிந்திக்கவேண்டிய பெரும் பகுதி உள்ளதையும் ஏன் எமது பகுத்தறிவு உணரத்தவறுகிறது?


அடுத்து, நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?



உங்களது கருத்துகள்.